பாண்டியன் அறிவுடை நம்பி்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

பாண்டிய வேந்தன் அறிவுடை நம்பி என்பது இவனது இயற்பெயர். அப்பெயர்க்கேற்ப இவனை அறிவுடை வேந்தன் என்று பிசிராந்தையாரும் பாடுவர் (புறம் 184). ஆயினும் அரசன் வரிசையறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தைக் கூடி அன்புகெட மக்களிடத்திருந்து கொள்ளும் பொருளை விரும்புவதன் கேட்டினைக் கூறும் முறையில் அவர் இவனுக்குச் செவியறிவு நூஉவாகப் பாடிய அப்பாடலால் இவன் ஒருகால் சிற்றினச் சேர்க்கையின் பாற்பட்டு நாட்டு மக்களிடத்து இறைப் பொருளை மிகுதியும் வலிந்து கொண்டனனோ என்றும், எண்ணத் தோன்றுகிறது. பாராளும் வேந்தனான இவன் பாப்புனையும் புலவனாகவும் திகழ்ந்தான்.

படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலருடனே கூடவுண்ணும் உடைமை மிக்க செல்வராயினும் குறுகக் குறுக நடந்து சென்று சிறுகையை நீட்டிக் கலத்திலுள்ள உணவைத் தரையிலேயிட்டும் கூடப்பிசைந்து தோண்டியும், வாயாற் கவ்வியும் கையால் துழாவியும், நெய்யுடைய அடிசிலை மெய்யிற்படச் சிதறியும், இங்ஙனம் காண்பார் அறிவை இன்பத்தினால் மயக்கும் மக்களைப் பெறாதோருக்குப் பயனாகும் பொருள் ஏதும் வாழ்நாளில் இல்லை என்னும் கருத்தமைந்த புறப்பாடலில் (188) மக்கட் செல்வத்தின் மாண்பினை இவன் சிறப்பாகப் பாடியுள்ளான். அஃதன்றியும் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய தொகை நூல்களில் இவன் பாடல்கள் ஒவ்வொன்று காணப்படுகின்றன.

தினைப்புனங்காக்கும் தலைவி, தலைவனைக் குறித்த நினைவு மிகுதியில் கிளியோப்பு தலையும் மறந்து ஆழ்ந்திருக்கையில் பகலே சிறைப் புறமாகத் தலைவன் வந்து நிற்கக் கண்ட தோழி, அத்தலைவியைக் காவலில் முடுக்குவாள் போல் தலைவனை வரைவு முடுக்குவாளாய்க் கூறுவதை இவரது அகப்பாடல் நயமுற அமைக்கும். தலைவனுக்குக் குறை நேர்ந்த தோழி தலைவியிடம் வந்து. அவள் அவனது குறையை நயக்குமாறு அவன்பால் இரக்கம் வர மொழிவதைக் குறுந்தொகைப்பாடல் (230) குறிக்கும். தலைவன் வரைவு நீட்டித்தபோது தோழி அவனை எதிர்ப்பட்டு அவன் தொடர்பு குறித்தெழுந்த அலரால் தம் நாணழிந்த நிலைமையைக் கூறி வரைவு கடாவுவதாக இவரது நற்றிணைப் பாடல் (15) அமைந்துள்ளது. மாசில் கற்பின் மடவோளோருத்தி தன் குழவியைப் பேய் வாங்கத் தான் அதனைக் கைவிட்டாற்போல யாமும் எம்முடன் நெடுங்காலமிருந்த நாணைக் கைவிட்டோம் என்று அப்பாடலில் தோழி கூற்றில் இவர் அமைத்த உவமை நயம் உணர்ந்தின்புறத் தகுவதாகும்.